Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, December 3, 2011

ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இனி கட்டாயம்




சென்னை, டிச.1: ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் செய்திக்குறிப்பு:


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி ஆசிரியர் நியமனங்களுக்கு “ஆசிரியர் தகுதித் தேர்வு” Teacher’s Eligibility Test கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தும் முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அரசாணை (நிலை) எண். 181, ப.க.துறை நாள். 15.11.2011ல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி “ஆசிரியர் தகுதித் தேர்வு” என்பது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அடிப்படைத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்படும் NET/SLET தேர்வு எப்படி அவசியமானதோ அதே போன்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கு இத்தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


 இடைநிலை ஆசிரியர் நியமனங்களைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போது பின்பற்றப்படும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படை முறையே தொடரும்.  எனினும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், “ஆசிரியர் தகுதித் தேர்வினை” எழுதி தகுதிபடைத்துக் கொள்வதில் எந்த தடையும் இல்லை.
பட்டதாரி ஆசிரியர் நியமனங்களைப் பொறுத்தவரை “ஆசிரியர் தகுதித் தேர்வு” கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் குழும வழிகாட்டுதலின்படி கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்களும், சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கான வினாக்களும் இருக்கும்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டதாரி தமிழ் மற்றும் பட்டதாரி ஆங்கில பாடங்களுக்கு தனித்தனியே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் 60 மதிப்பெண்களுக்கு தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் வினாக்கள் அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation