Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, November 5, 2011

Nov-05


கூட்டு கடற்படைப் பயிற்சி: இந்தியா, ஜப்பான் முடிவு

First Published : 04 Nov 2011 01:44:25 AM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை. நாள்: புதன்கிழமை.
டோக்கியோ, நவ.3: இந்தியாவும், ஜப்பானும் கூட்டாக கடற்படை பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இந்த ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
 மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான உயர்நிலை ராணுவக் குழு ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யசோவ் இசிகவா தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்தியபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 கடல் பகுதியில் தொடர்ந்து சீன கடற்படை ஆதிக்கம் செலுத்திவருவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 ஜப்பானிய கடல் பகுதியில் கூட்டு பயிற்சி மேற்கொள்வது தொடர்பான விரிவான திட்டம் வகுக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இரு நாட்டு வீரர்களும் கடற்கொள்ளையர்களைத் தடுக்கும் அதே நேரத்தில் கூட்டாக செயல்படுவதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்படும்.
 இரு தரப்பினரிடையே நாள் முழுவதும் இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி கூறியது: இரு நாடுகளிடையிலான ராணுவ கூட்டு ஒப்பந்தம் மிகவும் வெளிப்படையானதாகவும், இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். இரு நாடுகளிடையிலான ராணுவ ஒத்துழைப்பு எதிர்காலத்தில் புதிய நிலைக்கு உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான கடல் பகுதியை தொடர்ந்து கண்காணித்து அதில் பரஸ்பரம் உதவிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இரு நாடுகளும் ராணுவ கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. இதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் ராணுவ அமைச்சர் இந்தியாவுக்கு வர உள்ளார்.
 கடற்கொள்ளையர்களிடமிருந்து காக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளின் ராணுவப் படைகளும் கூட்டாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. கிழக்கு அரபிக் கடல் பகுதியில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்திய கடற்படை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தோனி கூறினார்.
 கடற்கொள்ளையர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மற்றும் இவர்கள் மூலம் புழங்கும் நிதி பயங்கரவாத குழுக்களுக்குச் செல்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
 இந்தக் கடல்பகுதியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சரக்குக்கப்பல்களை பாதுகாக்கும் பணியில் இரு நாட்டு கடற்படையினரும் ஈடுபடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்தோனி கூறினார்.
 சர்வதேச கடல் பகுதியில் கப்பல்கள் பயணிப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சர்வதேச விதிமுறைகளை மதிக்கும் வகையிலும், ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள விதிகளுக்கு ஒத்த வகையிலும் விதிமுறைகள் வகுக்கப்படும் என்று அவர் கூறினார்.
 கடற்படை கூட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். அதேசமயம் பரஸ்பரம் இரு நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும தெரிவித்தார்.
 இந்தியக் குழுவில் பாதுகாப்புத்துறைச் செயலர் சசிகாந்த் சர்மா, ஜப்பானுக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத், கடற்படை துணைத் தளபதி ஆர்.கே. தவண், மத்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. அலுவாலியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் பிரதமர்

First Published : 05 Nov 2011 01:09:04 AM IST

புது தில்லி, நவ.4: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்ற உள்ளார்.
 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக, மாலத்தீவில் நடக்க இருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், நவம்பர் 10,11 ஆகிய தேதிகளில் மாலத்தீவு செல்கிறார். அப்பொழுது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மக்களவைத் தலைவர் மஜ்லிஸ் அப்துல்லா ஷாகித் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
 அந்நாட்டின் 78 ஆண்டுகால வரலாற்றில், வெளிநாட்டைச் சேர்ந்த பிரதமர் ஒருவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுவது இதுவே முதல் முறை.
 ஷாகித் விடுத்துள்ள அழைப்பில் 77 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்தில், இந்தியப் பிரதமர் உரையாற்றுவது இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
 மற்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.
 இதற்கு முன் கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.




தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 2012 ஜனவரியில் வெளியாகும்: கபில் சிபல்

First Published : 05 Nov 2011 01:23:13 AM IST

புதுதில்லி,நவ.4: தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை 2012 ஜனவரியில் வெளியாகும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 இந்தக் கொள்கை தொடர்பான வரைவு மசோதா தயாராகிவிட்டது. அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், சேர்க்க வேண்டிய பகுதிகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு தொழில்துறையினரின் பார்வைக்கு அரசு அனுப்பிவைத்தது.
 தொழில்துறையால் தாமதம்: தொழில்துறையினர் அதைப் படித்துப் பார்த்து, தங்களுக்குள் விவாதித்து, அரசிடம் தெரிவிக்க வேண்டிய பரிந்துரைகளைத் தேர்வு செய்ய நேரம் எடுத்துக் கொள்வதால் தேசியக் கொள்கையை வெளியிடுவதில் தாமதம் ஆகிறது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
 அக்டோபரிலேயே தயார்: தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை தொடர்பான வரைவு மசோதா 2011 அக்டோபர் மாதத்திலேயே தயாராகிவிட்டது. இந்த வரைவு மசோதாவில் 3 விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
 1. வெளிப்படைத்தன்மை, 2. முதலீட்டுக்கான மேம்பட்ட சூழல்,3. நுகர்வோர் நலனுக்கு ஊக்குவிப்பு ஆகிய 3 விஷயங்களுக்கு புதிய வரைவு மசோதாவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
 இலவச ரோமிங்: தேசிய அளவில் இலவசமாக ரோமிங் வசதியைப் பெறுவது, சேவை அளிப்பவர் தன்னால் அதைத் தொடர முடியாத நிலை வரும்போது உரிமத்தை அரசிடம் திருப்பித்தந்துவிட்டு தொழிலைவிட்டு வெளியேற அனுமதி, சேவை அளிப்பதற்கு உள்நாட்டிலேயே தயாராகும் கருவிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை ஆகியவை தற்சார்பு உள்ள தொலைத்தகவல் தொடர்புத்துறையின் அம்சங்களாகத் திகழ புதிய கொள்கை கவனம் செலுத்துகிறது.
 டிராயின் பங்கு பற்றிய குழப்பம்: தொலைத்தகவல் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) அளிக்கும் பரிந்துரைகளை, தொலைத் தகவல் தொடர்புக் கொள்கை என்று தவறாகப் புரிந்துகொள்ளும் போக்கு செய்தி ஊடகங்களிடம் காணப்படுகிறது என்று கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.
 தொலைத்தகவல் சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வது, ஒன்றின் பங்குகளை மற்றொன்று வாங்குவது போன்றவை குறித்துத்தான் டிராய் பரிந்துரைகளைச் செய்கிறது.
 தொலைத்தொடர்புத்துறை கொள்கையை வகுப்பது துறைதான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் கபில் சிபல்.




ஒரிசா மாநிலம் இனி ஒடிசா!

First Published : 05 Nov 2011 03:53:57 AM IST


புவனேஸ்வரம், நவ. 4: ஒரிசா மாநிலம் இனி ஒடிசா என்று அழைக்கப்படும். ஒரியா என்று இதுவரை அறியப்பட்டிருந்த மொழி இனி ஒடியா என்றே அழைக்கப்படும். இந்தப் பெயர் மாற்றங்களுக்கு குடியரசுத் தலைவர் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
 இதைக் கொண்டாடும்விதமாக, சனிக்கிழமை (நவம்பர் 5) அந்த மாநிலத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரத்தில் அரசு ஏற்பாடு செய்த பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நாகர்களுக்கு சிதம்பரம் வேண்டுகோள்

First Published : 04 Nov 2011 01:59:29 AM IST

மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்துக்கு பாவோமாய் பழங்குடியினர் ஆடைகள் அணிந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
இம்பால்,நவ.3: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 74 நாள்களாக மேற்கொண்டுவரும் ""பொருளாதாரத் தடை'' நடவடிக்கையை ஐக்கிய நாகர்கள் கவுன்சில் அமைப்பினர் கைவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.
 தேமங்லாங் மாவட்டத் தலைநகரில் வியாழக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். முதல்வர் இபோபி சிங் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 "வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி மத்திய அரசிடம் இருக்கிறது. இம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் அரசுடன் பேசியே தீர்வு காணலாம்.
 பொருளாதாரத் தடை நடவடிக்கை மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்குப் போக்குவரத்தை அனுமதிக்காமல் நிறுத்துவதால் யாருக்கும் நன்மை இல்லை.
 நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ முயற்சித்தாலே நம்முடைய பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
 சாதர் மலை மாவட்டத்துக்கு சுயாட்சி அதிகாரம் தருவது குறித்தோ அதை தன்னாட்சி பெற்ற பகுதியாக அறிவிப்பது குறித்தோ தங்களுடைய ஆட்சேபம் என்ன என்பதை மத்திய அரசுடன் ஐக்கிய நாகர்கள் கவுன்சில் பேசலாம்' என்றார் சிதம்பரம்.
 மாநிலத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்தில் முடித்துத்தர வேண்டும் என்றும் சிதம்பரம் அப்போது வேண்டுகோள் விடுத்தார்.
 நாகர்கள் அதிகம் வசிக்கும் உக்ருல், சேனாபதி, தேமங்லாங் மாவட்டங்களை அவர் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் சுற்றிப்பார்த்தார்.
 நாகர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சேனாபதி மாவட்டத்தில் குகி இனத்தவர் அதிக அளவில் (பெரும்பான்மையினராக) வசிக்கும் சாதர் மலைப்பகுதியைத் தன்னாட்சிப் பிரதேசமாக, தனி மாவட்டமாக மாநில அரசு அறிவித்துள்ளது. சாதர் மலை மாவட்ட கோரிக்கை கமிட்டியின் வேண்டுகோளை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
 தங்களுடைய பகுதியில் குகி இனத்தவருக்குச் சலுகைகள் காட்டப்படுவதாகக் கருதும் நாகர்கள் அதை எதிர்த்துப் பொருளாதாரத் தடை நடவடிக்கையைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக அரசு தங்களிடம் ஆலோசனை கலந்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 குகி மக்களுக்கென தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று மாநிலத் தலைமைச் செயலர் டி.எஸ். பூணியா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையைத்தான் மாநில அரசு அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
  

No comments:

Post a Comment

We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation